முக விசீகரம் பெற
பாட்டி வைத்தியம் - மு...
இந்நாட்களில் நமக்கு பலவிதமான நோய் தொற்றுகளும், நோய்க் கிருமிகளும் வெகுவாக பரவியுள்ளன. நாம் எவ்வளவு தான் நம்மை பாதுகாத்துக் கொண்டாலும் ஏதாவது ஒரு நோயினால் கண்டிப்பாக பாதிக்கப்படுகிறோம். அந்த நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் நமது உடல் அதன்பிறகு முன்பைவிட பலமற்று மிகவும் பலவீனமாகிறது.
இதற்கு காரணம் நாம் எடுத்துக்கொண்ட ஆங்கில மருந்தின் பக்க விளைவுகளாகும், அல்லது மருந்து நமது உடலிலேயே தங்கி விடுவதாலும் கூட ஏற்படலாம். அவ்வாறு நமது உடம்பில் சிறு வயது முதலே தேவையற்ற விஷத்தன்மை உள்ள வேதிப்பொருட்கள் நாம் உண்ணும் உணவுகளினாலும் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளினாலும் நம் உடலில் தங்கி பலவித பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால் நமது உடல் பலம் இன்றி சிறு வயதிலேயே வயதான தோற்றத்தையும் முதுமையில் ஏற்படும் பிரச்சினைகளை இளம் வயதிலேயே சந்திக்க நேரிடுகிறது.
இங்கு கூறப்பட்டுள்ள இயற்கை மருந்தான நாட்டு மருந்து பக்குவங்கள், இன்றும் பல கிராமங்களில் பல குடும்பங்களிலும் கடைபிடிக்கப்பட்டு அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
அப்பாட்டி வைத்தியங்கள் பின்வருமாறு.
தூதுவளை இலையை ஒரு கொத்து எடுத்து நன்கு அலசி பின் இலைகளை மட்டும் பிரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும். இப்படி அலசி சுத்தம் செய்த தூதுவளை இலையை தூய்மையான பசு நெய்யில் வதக்கி பின் அதனை சிறிது வறுத்த உளுந்துடன் துவையலாக செய்து சாப்பிடலாம். அல்லது இந்தத் தூதுவளை இலையை வேகவைத்து எடுத்த துவரம்பருப்புடன் நன்கு மசித்து குழம்பாகவும் சாப்பிடலாம்.
அல்லது வெறும் தூதுவளை இலை, சிறிது பூண்டு மிளகாய் போன்றவற்றை சேர்த்து மசித்து சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
இவ்வாறு தூதுவளை இலையை வாரத்தில் இரண்டு முறை நம்முடைய தின உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பலம் பெறும், மங்கிய அறிவாற்றல் பெருகும். உடம்பில் உள்ள தேவையில்லாத கசடுகள் அகலும்.
தினந்தோறும் ஒரு பத்து தூதுவளைப் பூக்களை நன்கு அலசி, பின் அதனை தூய்மையான பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி, அதனுடன் ருசிக்கு சிறிது மண்டை வெல்லம் கலந்து தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் தினமும் காலை பருகிவர உடலிலுள்ள தேவையில்லாத மருந்து வீரியம் குறைந்து உடல் பலம் பெறும். இளவயதில் தோன்றும் முதுமை போன்ற நிலை மாறி, நமது தேகம் சுறுசுறுப்பு பெறும்.
ஆவாரம்பூவை சூரணமாகவோ அல்லது பூக்களை பசும்பாலில் கலந்து நன்கு காய்ச்சி இந்தப் பாலை தினமும் பருகி வந்தால் பலகீனம் ஆகிய உடல் நல்ல ஆரோக்கியத்துடன் பலம் பெறும்.
அல்லது ஆவாரம் பூவின் இதழ்களை கறிக்கூட்டாக அடிக்கடி உணவுடன் சேர்த்து பயன்படுத்தினால் எண்ணிலடங்கா பலன்களை தந்து நமது உடலை அதிக பலம் கொண்டதாக மாற்றும். அதுமட்டுமின்றி இந்த ஆவாரம் பூவில் உள்ள சில அரிதான தாதுக்கள் உடம்பில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்த செல்களை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உடலில் எப்பொழுதும் இல்லாத ஒரு புதிய பலம் உண்டாகி அதனால் தேகம் பொன்னிறமாகும்.
200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதில் ஈரத்தன்மை போக நிழலில் உலர்த்தி காய வைக்கவேண்டும். இப்படி ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் உலர்த்திய இஞ்சி துண்டுகளை, தூய்மையான 200 கிராம் தேனில் போட்டு நான்கு நாட்கள் நன்கு ஊற விட வேண்டும். தேனில் நன்கு ஊறிய சிறிய இஞ்சித் துண்டுகளை தினமும் காலை வெறும் வயிற்றில் ஓரிரு துண்டுகள் மட்டுமே உண்டுவர வேண்டும்.
இப்படித் தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாள் வெறும் வயிற்றில் காலையில் இந்த இஞ்சியை உண்டுவந்தால் உடலில் தேங்கியுள்ள நாட்பட்ட மருந்து கசடுகள், தேவையில்லாத கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு உடல் மிகுந்த ஆரோக்கியம் உண்டாகி பலம் பெறும். இருதயம் பலப்படும்.
வேப்பிலை, வேப்பம்பூ, வேப்ப மரப்பட்டை, மூன்றையும் நன்கு இடித்து பொடித்து நுண்ணிய சல்லடையால் அரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வேம்பு பஞ்சாங்கச் சூரணம் மற்றும் 10 அரிசி எடை உள்ள தூய்மையான பசும் நெய், அதனுடன் சிறிது தேன் , வெண்ணை இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து இந்த கலவையை இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் பலப்பட்டு நரை,திரை மாறும்.
40 கிராம் நீர்முள்ளி விதை மற்றும் 20 கிராம் நெருஞ்சி விதை மற்றும் 10 கிராம் வெள்ளரி விதை இவை அனைத்தையும் நன்கு தூளாக்கி, அந்த தூளை ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லி லிட்டர் அளவு வரும் வரை நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். இவ்வாறு நன்கு காய்ச்சிய நீரை வடிகட்டி அதனை காலை மற்றும் மாலை ஒரு வாரம் பனங்கற்கண்டு கலந்து குடிக்க உடம்பில் உள்ள நச்சு வகைகள் அனைத்தும் வெளியேறும். அதுமட்டுமல்லாது நீர் எரிச்சல், மேக நீர், வாத நீர், உடல் காங்கை போன்றவை அனைத்தும் நீங்கி உடலுக்குத் தேவையான ஏழு தாதுக்களும் வலுவடைந்து உடல் பலமடையும். குதிரையைப் போன்ற வேகம் உண்டாகும்.
100 கிராம் சிறு கொன்றை வேர் பட்டையை எடுத்து அதனை ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லி லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். இப்படி நன்கு காய்ச்சி எடுத்த நீரை வடிகட்டி இதனை காலை மாலை கொடுக்க உடல் பலப்படும், வேறு சிறிய உடல் நோய் தொற்றுக்கள் ஏதேனும் அண்டாமல் இந்த மருந்து காக்க உதவும். அதுமட்டுமின்றி தேகம் அழகு மற்றும் கவர்ச்சி பெறும்.
மகிழம்பூ மூன்று கைப்பிடி சேகரித்துக் கொள்ளவும், அதனை 300 மில்லி லிட்டர் நீரில் போட்டு அந்த நீரை நன்கு சுண்டக்காய்ச்சி 100 மில்லி லிட்டர் வந்தவுடன் அடுப்பை அணைத்து குளிர விட வேண்டும். இப்படி காய்ச்சி எடுத்த மகிழம்பூ குடிநீரை பசும் பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் உண்டுவர உடல் வலிமை பெறும். இதனை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
இதில் குறிப்பிட்டுள்ள மருத்துவ குறிப்புகளை எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. யார் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம்.
2 Comments