எளிய நல்வாழ்வு க
எளிய நல்வாழ்வு குறி...
வெகு நாட்கள் பல நோய்களை ஆராய்ந்து அதற்கான மருந்துகளை இயற்கையில் இருந்தே பெற்று அதனை பலருக்கும் செலுத்தி வெற்றி பெற்று அல்லது சிறு தோல்வியும் அடைந்து அதனால் இன்னும் சில விஷயங்களையும் கற்று தெளிந்து வெற்றி பெற்றவரே சித்தர் எனப்படுவர். சித்தி பெற்றவர் சித்தர் என்றும் சித்தி உடையவரும் சித்தர் என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வகையான சித்தர்கள் நேரம் ,காலம் ,இடம், சாதி, சமயங்களை கடந்தவர்கள்.
இவர்கள் கண்டறிந்தவற்றில் மிக மேன்மையானவை மற்றும் மிக ரகசியமானவை என்பன உடலும் உயிரும் நீண்ட நெடுங்காலம் அழியாது காக்க உதவும் ஓகம் (ஓகம் என்ற தமிழ்ச் சொல்லே திரிக்கப்பட்டு யோகா ஆனது), நாடி மருத்துவம் முதலிய அரிய வகையான முறைகள் ஆகும்.
இவர்கள் செய்த ஆய்வில் கண்டறியப்பட்ட கற்ப மருந்தை தம்முடைய பேராசைகளுக்கு பயன்படுத்தாமல் மக்களின் பிணி நீக்கும் மருந்துகலாக்கி பயன் கண்டனர். இவ்வகையான ஆய்வுகளை கண்டறிந்து ஞானம் பெற்ற சித்தர்கள் மொத்தம் பதினெண் (18) சித்தர்கள் ஆவார்கள்.
இவர்களை நம் முன்னோர்கள் தெய்வங்களாக பாவித்து வணங்கி வருவது இன்றும் மரபு. நம் உயிர் காக்கும் மருத்துவரை தெய்வமாக பாவிப்பது இயற்கைதான். இவ்வருள் பொருந்திய சித்தர்கள் வழிவழியாக கையாண்டு வந்த மருத்துவ முறையை சித்த மருத்துவம் எனப்படும்.
சித்தர்கள் எவ்வாறு நோயை கண்டறிந்து அதனை எவ்வாறு வகைப்படுத்தினர்?
மனித உடல் இயக்கத்தை மூன்று முக்கியக் கூறுகள் தீர்மானிக்கின்றன வாதம், பித்தம்,கபம்/ஐயம். இம்மூன்றும் ஒவ்வொருவருடைய உடலிலிருந்து ஒவ்வொரு விதமான செயல்களை புரியும் மூலக்கூறுகளே ஆகும்.
நாம் சுவாசிக்கும் சுவாசத்தை ஒழுங்குபடுத்துவது , மனதிற்கும் எண்ணத்திற்கும் புத்துணர்ச்சியூட்டுவது, மனதின் எண்ண ஓட்டத்தை சரிவர நடத்துவது, நாம் கற்றுத் தெளிந்த மொழிகளை சரிவர உச்சரிப்பது, உடல் நலமுடன் செயல்பட உடலினுள் உள்ள பல்வேறு தாதுக்களை மிகச்சரியான விகிதத்தில் உண்டாக்குவது, தினந்தோறும் உடல் கழிவுகளை முழுவதும் வெளியேற்றுவது இவையாவும் வாதத்தின் தொழில்களாகும்.
நாம் உண்ட உணவை நன்கு செரிக்க வைப்பது, அறிவையும் நினைவாற்றலையும் தக்கவைப்பது மற்றும் தூண்ட வைப்பது, நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்களுக்கு அதற்குரிய தன்மையை வழங்கி அதன் நிறத்தை பாதுகாப்பது, பார்வைத் திறனை கூர்மையாக்கி தெளிவாக்குவது, நமது தோலிற்கு நல்லதொரு பளபளப்பும் உயிர் ஓட்டத்தையும் கொடுப்பதே பித்தத்தின் தொழிலாகும்.
நாம் உண்ட உணவு வயிற்றினுள் தேவையான ஈரப்பதத்துடன் கரைக்கவும், ஓயாது உழைக்கும் நம்முடைய இதயம் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் செயல்படவும், நம் நாவில் உள்ள அனைத்து ருசி நாளங்களும் அனைத்து விதமான சுவை உணர்வை உணரவும், உடம்பில் உள்ள ஒவ்வொரு எலும்பு மூட்டுகளும் அதனுடைய இடையறாது இயக்கத்திற்கு தேய்வு ஏற்படாமல் காக்கவும்,உடம்பில் உள்ள அனைத்து தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்ககும் உதவுவதே ஐயம் ஆகும்.
இவ்வாறு நம் உடலில் உள்ள அனைத்து தொழிலையும் சரிசமமாகப் பிரித்து அதனை பிழையின்றி செய்ய வாதம், பித்தம், கபம்/ஐயம் என்ற மூன்று கூறுகளே நம்முடைய உடலில் எந்த ஒரு நோயும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழும் மனிதர்கள் ஆகிய நம்மிடம் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமான உணவு பழக்கவழக்கம், இயற்கை சூழ்நிலை மாறுபடுதல், சுவாசிக்கும் காற்றில் ஏற்பட்ட மாசு, அன்றாடம் உடலுக்குத் தேவையான உழைப்பு இல்லாது போதல் போன்ற தவிர்க்க இயலாத பிரச்சினைகளால் உடலுக்கு பல விதமான ஒவ்வாமை மற்றும் மேல் கூறிய பித்த ,வாத ,ஐயம் இதில் ஏதேனும் ஒன்று மிகுதலும் அல்லது குறைதலும் நேரும்போது நோய் தோன்றுகிறது.
சித்த மருத்துவத்தில் நோயை கண்டறியும் மிகச்சிறந்த முறையாக நாடி பார்த்தல் கையாளப்படுகிறது. நாடி பார்த்து அவர் உடல் நிலையை கூறுவது மிக நுண்ணிய அருமையான ஒரு கலை ஆகும். இதனை மிகச்சாதாரணமாக அனைவராலும் கற்றுக் தேர்ந்துவிட முடியாது.
திறமைமிக்க, நன்கு அனுபவப்பட்ட சித்தர்களால் மட்டுமே இதனை கற்றுக்கொள்ள முடியும். இன்றைய காலகட்டத்தில் அப்படி சித்தர்களை நாம் எங்கும் காண முடிவதில்லை. ஆதலால் முன்பு வாழ்ந்த சித்தர்களிடம் இருந்து இந்த சித்த மருத்துவத்தை நன்கு கற்றுத் தேர்ந்து நீண்டகால பயிற்சிகளும் பெற்ற அவர்கள் வழிமுறை வந்த வெகு சில சித்த வைத்தியர்களே இன்று அதற்கு சாட்சியாக இருக்கின்றனர்.
மேற்கூறியவாறு சித்த மருத்துவத்தை நன்கு கற்றுத் தெளிந்து பயிற்சியும் பெற்ற ஒருவர் ,
கையின் பெருவிரலுக்கு கீழே உள்ள மணிகட்டு அருகே ரத்த நாளத்தின் மீது மூன்று விரல்களை வைத்து வாதநாடி ஆட்காட்டி விரலாலும், பித்தநாடி நடு விரலாலும், ஐய நாடி மோதிர விரலால் அழுத்திப் பார்த்து உணரலாம்.
அப்படிப் பார்க்கும் பொழுது வாத நாடி துடிப்பு மிதமாக இருந்து, பித்த நாடி துடிப்பு, வாத நாடி துடிப்பிற்கு பாதியாகவும், ஐய நாடி, பித்த நாடி துடிப்பில் பாதியாகவும் இருந்தால் அந்த உடம்பில் எந்த ஒரு நோயும் இல்லை என்று உணரலாம்.
இது மட்டும் இல்லாமல் நோயாளியின் சிறுநீர், மலம், நாக்கு, குரல் ,தோல் ,கண்கள் ,தோற்றம் , நகம், தலைமுடியின் தன்மை ஆகியவற்றை உற்றுநோக்கி அவற்றின் மாறுபாட்டாலும் நோயை கண்டறியலாம்.
1 Comment