Tips to Manage Screen Time for Kids
Tips to Manage Screen Time for Kids In the 21st cent...
கதைத்தல் அல்லது கதை சொல்லுதல் என்பது ஒரு கலை. அதிலும் குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கு தனித்திறமை வேண்டும். ஏறக்குறைய நாம் அனைவருமே கதை கேட்டு வளர்ந்தவர்கள் ஆகத்தான் இருக்க முடியும். ஆனால் அனைவருக்கும் கதை சொல்லும் திறமையும் பக்குவமும் உள்ளனவா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்.
உதாரணமாக குழந்தைகளுக்கு கதை சொல்லும் பொழுது ஒரு பெரிய மலை என்று சொல்வதை ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய மலை என்று ய் என்ற எழுத்தை இழுத்து, புருவம் உயர்த்தி கண்களை மலர்த்தி, தலையை ஒருபக்கமாக சாய்த்து கைகளை விரித்தவிரல்களுடன் நெஞ்சுக்கு மேலாக உயர்த்தி ஒரு பாவனையுடன் சொல்லும்பொழுது கதையின் சுவாரசியமும் கேட்கும் ஆர்வமும் அதிகரிக்கும் என்பதை மறுக்க முடியாது.
“பா (ர்)த்தா (ல்) பழவகைகளும் கனி வர்க்கங்களும் கொட்டிக்கிடக்குமாம் சாப்பிட எதுவுமே இல்லையாம்”
“‘சோ’னு மழை கொட்டுதாம் குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் இல்லையாம்”
இப்படி ஆரம்பிக்கும் அந்த கதை. பழவகைகள் என்ற சொல்லுக்கும் கனி வர்க்கங்கள் என்ற சொல்லுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பழங்கள் கொட்டிக் கிடக்கும் பொழுது ஏன் சாப்பிட எதுவுமே இல்லாமல் போனது?மழை கொட்டும் போது குடிக்க தண்ணீர் இல்லாமல் போனது எப்படி?என்ன?ஏன்?எப்படி என்றெல்லாம் கேள்வி கேட்க தெரியாமல் சுவாரசியமாக கதை கேட்டு வளர்ந்த காலம் அது.பின்னாளில் அதை நினைத்து நினைத்து எனக்குள்ளே சிரித்து மகிழ்ந்து இருக்கிறேன்.
கதைத்தல் என்பது நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வமாக எடுத்துக்கூறும் முறையாகும். இதில் கேள்வி கேட்டல், உரையாடுதல் மற்றும் புதிர் தீர்த்தல் ஆகிய பிற விஷயங்களும் அடங்கும் கதைகளை,
என மூன்று வகையாக சொல்லலாம்.
நமது வாழ்க்கையில் அல்லது நமது முன்னோர்கள், சுற்றத்தார் அல்லது நண்பர்களின் வாழ்க்கையில், அவர்களின் வாழ்க்கை நிலை அல்லது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை கதையாக்கி கூறுவது உண்மை கதையாகும். நமது நாட்டு வீரர்கள், வீரச்செயல்கள், மரபுக்கதைகள் ,அரசர்கள், அவர்களது ஆட்சி முறைகள் இவைகளைப் பற்றிய விவரங்களையும் கதையாக்கி கூறுவதும் இதில் அடங்கும்.
கட்டுக்கதைகள் என்பது இல்லாத ஒருவர் அல்லது ஒன்றை மையமாக வைத்து நாம் பார்க்காத கேட்டறியாத செயல்களை இணைத்து புனையப்படும் கதைகள் ஆகும் .
மனிதன் கண்டிராத அரக்கர்களின் உருவங்கள் ,கூடு விட்டு கூடு பாய்தல் ,மந்திரங்கள் தந்திரங்கள் நிறைந்தவையாகவும் கட்டுக்கதைகள் அமைந்திருக்கலாம்.
புராணங்களில் கூறப்பட்டுள்ள கதைகளில் உள்ள நல்லொழுக்கம், நற்பண்புகள் ஆகியவை குழந்தைகளுக்கு எளிதில் மனதில் பதியும் வகையில் கூற வேண்டும் .
மனித மனத்தில் தோன்றும் நற்பண்புகளான அன்பு, பாசம் ,பக்தி ,நட்பு ,வீரம், இரக்கம் போன்ற பண்புகளால் ஏற்படும் நன்மைகள்; கோபம், பேராசை ,பொறாமை மற்றும் பிறருக்கு தீங்கு விளைவித்தல் ஆகிய குணங்களாக ஏற்படும் தீமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக நாம் கூறும் புராணக் கதைகள் அமைந்திருக்க வேண்டும்.
புராணக்கதைகளில் நாயகர்கள் என்று கருதப்படும் ராமன் அர்ஜுனன் ஆகியோரின் நற்பண்புகளை பற்றி கூறும் பொழுது எதிர் நாயகர்கள் என்று சொல்லப்படும் இராவணனின் பக்தி,
துரியோதனன் காட்டும் நட்பின் பெருமை, கர்ணனின் வீரம் மற்றும் கொடைத் தன்மை ஆகியவைகளும் குழந்தைகளுக்கு சொல்லித் தரப்பட வேண்டும்.
சிறிது விவரம் தெரிய ஆரம்பிக்கும் பொழுது, குழந்தைகளை கதை சொல்லச் சொல்லி கேட்க வேண்டும். அவர்களின் கதைகளில் கருத்து ,நீதி, உவமை, புதிர், புத்திசாலித்தனம் எதையும் நாம் எதிர்பார்க்க கூடாது .இருப்பினும் அதை ஆர்வமாக கேட்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கான கதையினை குழந்தைகளைத் தவிர வேறு யாரால் சிறப்பாக சொல்ல முடியும்?
வா,போ,தா,பூ போன்ற ஓர் எழுத்து சொற்களில் ஆரம்பித்து மலை ,காடு,இலை , கிளை போன்ற ஈரெழுத்துச் சொற்கள், பின்பு பகல், இரவு ,மயில் ,இறகு போன்ற மூன்றெழுத்துச் சொற்கள் என கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை உபயோகிக்கும் முறைகளை கற்றுத் தருவதற்கு கதை சொல்லுவது மிகவும் உபயோகமாக இருக்கும்.
கூட்டுக்குடும்பங்கள் குறைந்து வருவதாலும், பள்ளிகளில் பெரும்பாலும் மதிப்பெண்களை குறிக்கோளாகக் கொண்டு கற்பித்தல் முறை பின்பற்றப்படுவதாலும் தற்பொழுது நாம் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே கதை கேட்பது குழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்கும் என்பதை உணர்ந்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அதிகமதிகம் கதை சொல்லி வளர்ப்பதன் மூலம் கவனிக்கும் திறமை, நற்பண்புகள் மற்றும் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளாக செதுக்கி வளர்த்தெடுக்க முடியும்.
சாது
வ.போ.அலுவலரின் நே.மு. உதவியாளர் (ஓய்வு)
படித்தல், எழுதுதல்.