உங்களுடைய உடல் வாத உடலா? கண்டறிவது எப்படி? உணவு முறை என்ன?

 

நமது உடலின் தசை, எலும்பு மற்றும் அனைத்து மூட்டுகளின் இயக்கங்களை சரிவர இயங்கச் செய்வது இந்த வாதம் ஆகும். நமது உடலுக்குத் தேவையான ஆக்சிசன் அளவை சரிவர பிரித்தெடுத்து அனைத்து பாகங்களுக்கு கொடுக்கும் பணியையும், அதேநேரம் சீரான சுவாசத்தை மிகச்சரியான விகிதத்தில் உடல் கிரகித்துக் கொள்ளவும் உடலில் உள்ள கழிவுகளை முழுவதும் வெளியேற்றுவதும் வாதத்தின் பணியாகும்.

இதில் ஏதாவது ஒன்று சரிவர இயங்காது போயின் வாதம் மிகுதலும், குறைதலும் என்று அர்த்தமாகும்.

Vata Body Type

வாத உடல்வாகு என்பதை கண்டறிவது எப்படி?

வாத உடல் எவ்வாறு தோற்றமளிக்கும்?

ஒருவருக்கு வாத உடல் எனில் அவர்கள் அதிகமாக சதை பிடிப்பு கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் மெலிந்து காணப்படுவார்கள். இதற்கு காரணம் அவர்கள் உணவு செரிமானம் மிகச் சரியான அளவில் அமைந்து, உண்ணும் உணவு மிக எளிதாக செரித்து தேவையற்ற கொழுப்புகள் உடலில் தங்காது வெளியேற்றிவிடும்.

வாத உடல் கொண்டவர்களுடைய எலும்புகள் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். ஆதலால் இவர்கள் அதிகமாக உடலுழைப்பு செய்யத்தக்கவர்களாக இருப்பார்கள். இவர்களது உடம்பில் இயற்கையாகவே கால்சியம் சத்துக்கள் அதிகமாக உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவடையும்.

மேலும் படிக்க – சித்த மருத்துவமும் அதன் ரகசியங்களும் – 1

இவர்களுடைய தோல் மிகவும் வறட்சியாக காணப்படும். இதற்கு காரணம் இவர்கள் உடம்பில் வாதம் மிகுதியாக உள்ளதால் தோலிலுள்ள துளைகள்  அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். இதனாலேயே இவர்களுடைய தோலிற்கு தேவையான எண்ணை தன்மையை தக்க வைக்க முடியாததால் தோல் மிகவும் வறண்டு காணப்படும். வாத உடல் கொண்டவர்கள் முடி வளர்ச்சி மிக நன்றாகவே  இருக்கும். பெரும்பாலும் தலை முடியின் தன்மை சற்று அடர்த்தியாக காணப்படும்.

வாத உடல்வாகு கொண்டவர்கள் இயற்கையாகவே உணவு செரிமானம் மிக எளிதாக நடைபெற்று உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறுவதாலும் , கால்சியம் சத்து அதிகம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலிமை உடையதாக இருப்பதாலும் இவர்கள் மிகவும் தேக ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அவ்வளவு எளிதாக சோர்வடைந்து விடமாட்டார்கள். இவர்களுக்கு மிக அதிக அளவில் ஹார்மோன் சுரக்கும் .

இப்படி இவர்களுடைய ஹார்மோன் சுரப்பது அதிகமாக இருப்பதால் இவர்களுடைய ரத்த ஓட்டம் அதிவேகமாக இருக்கும். ஆதலால் இவர்களுக்கு ரத்தக்கொதிப்பு சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கூடவே, இவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகவே இருக்கும். இதனால் இவர்களுடைய நினைவாற்றல் சற்று குறைவாகவும், மறதி மிகுதியாகவும் இருக்கும். இந்தக் காரணத்தால் இவர்களுக்கு தங்களின் மேல் தன்னம்பிக்கை குறைவு. படபடத்து பேசுவதுடன் மட்டுமல்லாமல் இவர்கள் பொறுமை அற்றவர்களாகவும், தங்களுடைய கருத்துக்களை அடிக்கடி மாற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.

வாத உடல்வாகு கொண்டவர்களின் இயல்பு:

வாத உடல்வாகு கொண்டவர்கள் ஞாபகத் திறன் குறைவாக இருப்பதனால் இவர்கள் வாழ்க்கையில் நடந்த தோல்விகளை நினைத்து துவண்டு போக மாட்டார்கள். அதை மறந்து அதைத்தாண்டி அடுத்த வெற்றியை நோக்கி அடுத்த அடி எடுத்து வைப்பார்கள். தன்னம்பிக்கை குறைவாக இருந்தாலும் மனம் தளராமல் தங்களுடைய கடின உழைப்பால் முன்னேறுவார்கள்.

மேலும் படிக்க – பூப்பெய்திய பெண்குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு

வாத தோஷம்

வாதம் அதிகமானால் அதனை வாத தோஷம் என்று சித்தர்கள் வரையறுத்துள்ளார்கள். எப்பொழுது ஒரு உடலில் வாதம் மிகுதியாகி அவர்களுடைய நாடித்துடிப்பு அதிகமாகி உடல் படபடப்பு அடைகிறதோ அப்பொழுது அவர்களுடைய உடல் கெடுகிறது. மனதில் பயம் உண்டாகிறது.

அவர்களுடைய மன நிலையை வைத்தே நம் உடம்பில் இப்பொழுது தோஷம் அதிகமாக உள்ளது என்பதை உணர்ந்தறிந்து  அவர்களாகவே அதை சரி செய்து கொள்ளலாம்.

மேலே கூறிய படி படபடப்பு, மனக்குழப்பம், அதிக கவலை, அதிக முடி கொட்டுதல், சட்டென்று கோபம், பொறுமை இழந்து காணப்படுவது இவற்றில் ஏதேனும் மூன்று அல்லது நான்கு விஷயங்கள் ஒத்துப் போனால் நமக்கு வாதம் அதிகமாகி வாத தோஷம் உண்டாகி உள்ளது என்று அர்த்தம். இந்த செயல்பாட்டால் உடலில் உள்ள மற்ற செயல்கள் பாதிக்கப்படுகின்றன. அவை – உணவு செரிமானம் சரிவர செயல்படாததால் ஏற்படும் ஒவ்வாமைகள், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, அதனால் ஏற்படும் இருதய அடைப்பு, ரத்த ஓட்டம் அதிகரித்து அதனால் ஏற்படும் ரத்தக் கொதிப்பு, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை.

வாத தோஷத்தை எப்படி சரி செய்வது?

உடலின் வெப்பநிலையை சமமாக வைத்தல் இதன் முக்கிய பங்கு. உடம்பிற்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். நாம் அருந்தும் குடிநீர் சற்று வெதுவெதுப்பான நிலையில் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க- புத்தி கூர்மை அதிகரிக்க

வாத உடல்வாகு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு முக்கிய பொருள். ஆதலால் வெந்தயத்தை தவிர்த்து கடுகு மற்றும் மிளகு இரண்டையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தவிர நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் காய்கறிகளில் தவிர்க்க வேண்டியவை நீர் சத்து மற்றும் குளிர்ச்சி தன்மை அதிகமுடைய முள்ளங்கி, காளான், வாயுவை அதிகரிக்கக் கூடிய கிழங்கு வகைகளான உருளைக்கிழங்கு, வாழைக்காய், சீனி அவரைக்காய், கொத்தவரங்காய், காராமணி.

பருப்பு வகைகளில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, கொண்டைக்கடலை.

பழங்களில் ஆரஞ்சு, பச்சை வாழைப்பழம், திராட்சை, மற்றும் பால் வகைகளில் காய்ச்சாத பசும்பால், தயிர், மோர்.

மேலே குறிப்பிட்ட காய்கறி பழங்கள் மற்றும் பால் வகைகள் இவற்றினை சிலகாலம் தவிர்ப்பதால் அல்லது நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதால் நமது உடல் அதிக குளிர்ச்சி தன்மை அடையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

உடல் உஷ்ணத்தை தக்கவைக்க சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்:

சுக்கு ,மிளகு, எல், கடுகு, இஞ்சி, தேன்,லவங்கப்பட்டை, சீரகம், பூண்டு – இவை அனைத்தும் உடம்பிற்கு தேவையான சூட்டை கொடுக்கும் பொருட்கள். கடுகு மற்றும் மிளகு இரண்டுமே உடம்பிற்குத் தேவையான உஷ்ணத்தை தரவல்லது. அதுமட்டுமல்லாது வாதத்தினால் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிளகு ஒரு மிகச் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

காய்கறிகள் : காய்கறிகளில் பீட்ரூட், பச்சை மிளகாய், கிழங்கு வகைகள், தக்காளி

பழங்கள் : பழங்களில் ஆப்பிள், பப்பாளி, மாதுளை, அன்னாசிப் பழம், மாம்பழம் போன்றவை உடம்பில் சூட்டை அதிகரிக்கும் பழங்கள்.

கீரை: கீரை வகைகளில் முடக்கறுத்தான் கீரை, புதினா.

இவைகளை தாராளமாக தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி நாம் வாழும் இடத்திற்கேற்ப நம்மை சுற்றி வளரும் காய்கறிகளையும், பழங்களையும் , கீரை வகைகளையும் நாம் சரிசமமாக எடுத்துக் கொள்ளும்போது நமது உடலிலுள்ள உஷ்ண நிலையை சரியான நிலையில் வைத்துக்கொள்ள முடியும். வாத தோஷத்தில் இருந்து பாதுகாத்து வாதம் அதிகரிக்காத வண்ணம் உடம்பில் பித்தம், வாதம் ,கபம் மூன்றும் சமநிலையில் இருக்கச் செய்ய நமது உணவே அருமருந்தாக அமைகிறது.

வாதம் மிகுந்து உடலில் ஏற்படும் நோய்கள்:

இப்படி வாதம் மிகுதியால் தொடர்ந்து அவதிக்கு உள்ளானவர்கள் இதனை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால் அவர்களுக்கு பலவிதமான நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட உடல் பிரச்சினைகள் அதிகம் தோன்ற வாய்ப்புகள் உள்ளன.

வாத நோய்களான பக்கவாதம், முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி, நரம்பு இழுப்பு, போன்றவையும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, காலில் சதை பிறழ்ச்சி, நரம்பு சுற்றுதல், வாத மிகுதியால் கை கால் செயலிழப்பு, ஒற்றை தலைவலி, நரம்பு இழுப்பு, கை கால் முடக்கம், தசை பிடிப்பு, தசை இழுப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

மேலும் படிக்க – ரத்த சோகை குணமாக

வாத தோஷத்தை எப்படி சரி செய்வது?

மேலே கூறியது போன்று குளிர்ச்சி தரக்கூடிய உணவுகள் அனைத்தையும் தவிர்த்து உடம்பிற்கு வெப்பத்தை தரக்கூடிய உணவுகளை சேர்த்து உண்ண வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மிகவும் காரம் உள்ள உணவு வகைகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நறுமணம் உள்ள பொருட்களை அல்லது பூக்களை முகர்ந்தால் வாதம் சமமாகும்.

உடலும் மனமும் அமைதியாக நிதானமாக செயல்பட மூச்சு பயிற்சி செய்வது மிகவும் அவசியம். தினமும் காலை தரையில் அமர்ந்து சம்மணமிட்டு மூச்சுப் பயிற்சி செய்தால் உடம்பில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கி வாதம் சமநிலைப்படும். ரத்த ஓட்டம் சீராகும், உடம்பிற்கு தேவையான பிராணவாயு கிடைக்கப்பெற்று மனது இறுக்கம் குறையும்.

மிகவும் மென்மையான, இனிமையான இசையை கேட்பதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நரம்பு மண்டலங்களும் புத்துணர்ச்சி பெற்று அது தன்னைத்தானே புதுப்பித்து கொள்கிறது. ஆதலால் இசையை ரசிக்க பழக வேண்டும். மென்மையான இசையை கேட்பதன் மூலம் மனம் ஆழ்ந்த அமைதிக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. இதனால் தேவையற்ற சிந்தனைகள் மனதை விட்டு அகல்கின்றன.

சித்தர்கள் கூறிய முறைப்படி உணவே மருந்து என்பதை கடைப்பிடித்தால் நம் உடலில் தேவையில்லாத நோய்களை உடலை விட்டு துரத்த முடியும்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook 

 

 

 

 

 

Share This Article

Related Post

நல்வாழ்வு குறிப

நல்வாழ்வு குறிப்புக...

நல்வாழ்வு குறிப

நல்வாழ்வு - நற்குணங்...

non stick cookware

Myths and Facts about Nonstick Cookware

Myths and Facts about Non-Stick Cookware Nonstick Cook...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)